Quantcast
Channel: ராம்பிரசாத்
Viewing all articles
Browse latest Browse all 1140

கண்களைத்திற கண்மணி - சிறுகதை

$
0
0

கண்களைத்திற கண்மணி - சிறுகதை


நெஞ்சுக்குள் படபடப்பு இன்னும் அடங்கவில்லை தேவிகாவிற்கு. இப்போதுதான் நடந்தவாறு இருந்தது. கிண்டி ரயில் நிலையத்தை ஒட்டிய பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையத்தில் இறங்குவாள். கூட்டம் திமுதிமுவென அலைமோதியது வழக்கம்போல் அன்றும். பேருந்தின் மேற்கூரையை அனாயாசமாய் ஊடுருவும் வெயில் அள்ளித்தரும் வெக்கையில் உடல் முழுவதும் பெருக்கெடுக்கும் வியர்வை, அதைத்துடைக்கக் கூட அனுமதிக்காமல் விடாப்பிடியாய் குலுக்கும் பேருந்தை சமாளிக்க தவற விடமுடியாத கூரைக்கைப்பிடி, காலடியில் நாற்றமெடுக்கும் கூடைக்குள் உயிருடன் நெளியும் கடல் நண்டின் மீதான அருவருப்பு, யாரோ எடுத்த வாந்தியை அரைகுறையாய் மறைக்கும் கைப்பிடி மண், கண்முன்னே பள்ளிச்சிறுமிக்கு நடக்கும் பாலியல் தொல்லையைக் கண்டும் காணாது நிற்கும் அவலமான கையாலாகாத்தனம், மூக்கின் வழி குமட்டும் வியர்வை நெடி.

இறங்குகையில் பேருந்தின் வாசலை அப்பிக்கிடந்த கூட்டத்தில் கைப்பையையும், குடையையும் தவறவிட்டு விடாதபடி நெஞ்சோடு அணைத்தவாறே இறங்குகையில் தாமதமாகத்தான் உணர்ந்தாள் தேவிகா அந்த அசிங்கத்தை. இறுக்கி அணைத்த கைப்பை மற்றும் குடைக்கும் , அவளின் வயிற்றுப்பகுதியை மூடிய சுடிதாருக்கும் இடையே ஒரு ஆணின் கை, திருட்டுத்தனமாய் அவளுக்கே தெரியாமல்...

ச்சீ.. அனிச்சையாய் குமட்டிக்கொண்டு வர, ஆத்திரம் தலைக்கேற, திமிறக்கூட அவகாசம் தராமல் எத்தனையோ கைகளும் தோள்களும் அவளை சக்கையாக்கி அலட்சியமாய் புறந்தள்ளியதில் அந்தப் பொறுக்கி யாரென்று பார்க்கத் திரும்பினால், வல்லூறுகளும் ஆண்களும், ஆண்களும் வல்லூறுகளுமாய். எல்லோரும் அவரவர் நடையில் வேகங்கூட்டியவர்களாய். இந்த வேகம், தன் வழி செல்லவா அல்லது தன்னிடமிருந்து தப்பிக்கவா? யாரென்று நினைக்க? எவனென்று சபிக்க? சபித்துவிடுதலில் திருந்திடுவானா? சபித்தலில் நடந்த அசிங்கம் த‌ன் நெஞ்சைப் பிசையாமல் விடுமா? அந்தப் பள்ளிச்சிறுமி சற்று தொலைவில் சென்றுகொண்டிருந்தாள். அவள் கைகள் அவளின் முகத்தை ஒருமுறை அழுந்த வழித்ததாகத் தெரிந்தது. அழுதிருப்பாளோ? இருக்கலாம். மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் வயதான தனக்கே இத்தனை அருவருத்ததெனில், அந்தப் பிஞ்சு எத்தனை வருத்தமுற்றிருக்கும்?

அவளை ஓடிச்சென்று கட்டிக்கொள்ளவேண்டும் போலிருந்தது. கத்திக்கூச்சல் போட, அந்தப் பிணத்தை எட்டிப்பிடித்து கால் செருப்பால் கன்னத்தில் அறைய ஏனோ அவளுக்கும் வரவில்லை. ஏதும் நடவாத‌து போல், தான் நடந்து செல்வதை அந்தப் பிணம் நிச்சயம் ஓரக்கண்களால் கவனித்திருக்கும்.அடுத்தது எவளென்று கடந்துபோயிருக்கும். அவன் செய்த அக்கிரமத்தைக் கண்டுகளித்த ஏனைய பிணங்களும் தன் கையாலாகாத்தனத்தை நோட்டம் விட்டிருக்கும். உள்ளூர சிரித்திருக்கலாம் அல்லது ரசித்திருக்கலாம் அல்லது இதுபோல் தன் பங்கிற்குச் செய்து பார்க்க இன்னொரு தருணத்திற்கு முனைந்திருக்கலாம். அவன் செய்ததற்கு தண்டனை ஏதுமில்லை. மீண்டும் இதையே இன்னொரு பெண்ணுக்குச் செய்ய இது அவனை நிச்சயம் ஊக்குவித்திருக்கும். உச்சி வெயிலில் வியர்வை வழிவது இன்னமும் நிற்கவில்லை. உடலெங்கும் கசகசவென்றிருந்தது.

மாநகரப் பேருந்தைவிட்டு இறங்கி, ஓட்டத்திலும் நடையிலும், அழுகையையும் ஆத்திரத்தையும் புதைத்தபடி சாலையைக் கடந்து, அலுவலக வாசலை ஊடுருவி, லிஃப்ட் ஏறி, அனுமதிக்கென ஸ்வைப் செய்து, யாரும் கவனித்திடாதவாறு வராந்தையில் பயணித்து, இருக்கையை அண்டி, கைப்பை மற்றும் குடையை மேஜையில் வைத்துவிட்டு, சோர்வாய் தலைகவிழ்ந்தாள் தேவிகா. குளிரூட்டப்பட்ட அந்த அறையில், அவள் தெப்பலாய் வியர்த்திருந்தாள் இன்னமும். வியர்வை குளிரில் காய்வதை உணர்வது ஹிம்ஸையாக இருந்தது.

தன்னால் ஏன் அவனை ஏதும் செய்ய முடியவில்லை? அதற்குத் துணிவில்லையா? எல்லா பெண்களும் இப்படித்தானா? சமூகமென்னும் அமைப்பில் நாய்களும் இருக்கும்தான். எல்லா ஆண்களும் நாய்கள் இல்லைதான். ஆனால், நாய்களை எதிர்க்கும் துணிவை இதே சமூகம் பெண்களுக்கு சொல்லித்தருவதில்லையா அல்லது தான் கற்றுக்கொள்ளவில்லையா? எங்கிருக்கிறது இதன் தொடக்கம். நினைவு தெரிந்த நாள்முதலாய் தனிச்சிறப்புடன் நடத்தப்பட்டு கவனிக்கப்பட்டு பழக்கப்பட்டு, தன் விரலசைப்பில்தான் உலகமென உணரப்பழக்கப்பட்டு, திடீரென ஒரு நாள், சந்திக்கும் அத்துமீறல் பலவீனப்படுத்துகிறது. அதை எதிர்க்கப் பழக்கப்படாதது வினோதமாய்த் தோன்றுகிறது. கையாலாகாத்தனம் அச்சுறுத்துகிறது. உதவிக்கு யாருமில்லையே என்று ஏங்க வைக்கிறது.

பதற்றம். பயம். அத்தனை ஜனங்களுக்கு மத்தியில் மானம் போய்விடுமோ என்கிற பயம். எல்லோராலும் தான் தனிச்சிறப்புடன் நிமிர்ந்த பார்வையில் பார்க்கப்பட விரும்பிய இடத்தில், தலை கவிழ்ந்து, அவமானப்படுத்தப்பட்டு, ஏளனப் பார்வை பார்க்கப்பட்டு, கண்ணீர் சிந்த, யாராவது உதவமாட்டார்களா என்பதாய் நிற்கும் நிலை வந்துவிடக்கூடாது என்கிற பயமாய் இருக்கலாம். நாளையும் இதே வழியில் வரவேண்டியிருக்கையில், தான் வினோதமாய்ப் பார்க்கப்படுவது தொடர்கதை ஆகிவிடுமோ என்கிற பயமாய் இருக்கலாம். இந்தப் பிணத்தால் நாளை இதை விட மோசமாய் அவமானப்பட வேண்டி வந்துவிடுமோ என்கிற பயமாய் இருக்கலாம். கவுரமாய் வாழ எதையெல்லாம் சகிக்க வேண்டியிருக்கிறது, எத்தனை கடினப்பட்டு சகிக்கவேண்டியிருக்கிறது? பெண்ணைப் பொறுத்தமட்டில் கவுரவமாய் வாழ்தல் என்பது, அப்படியொரு வெளித்தோற்றத்தை உருவாக்குவது என்பதுதானோ?

இந்தப் பிணம், வானத்திலிருந்தா குதித்திருக்கும்? இவனுக்கும் ஒரு தாய் இருந்திருப்பாள். ஒரு சகோதரி கூட இருந்திருப்பாள். யாரோ ஒரு பெண்ணுக்கு மாமாவாகவோ, சித்தப்பாவாகவோ கூட இருக்கலாம். அவர்கள் பார்வைக்கு அவன் உத்தம புத்திரனாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால், தன்னிடம் பொறுக்கித்தனம் செய்கிறான். சகோதர, சகோதரிக்கு உத்தமனாகத் தெரியும் ஒரு ஆண், யாரோ ஒரு பெண்ணுக்கு பொறுக்கியாகத் தெரிவது உண்மையென்றால் உற்ற தோழனாக இருப்பவன் கூட யாரோ ஒரு பெண்ணிடம் இப்படி நடந்திருப்பானா? என்ன குதர்க்கமான சிந்தனை இது என்று நினைத்த மாத்திரத்திலேயே தோன்றியது.

தேவிகாவிற்கு உடல் ஜில்லிட்ட உணர்வு மேலிட்டது. தெப்பலாய் வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்ததால் இருக்கலாமென்று தோன்றியது. படபடப்பு இப்போது அடங்கியிருந்தது. மூச்சு எப்போது சீரானது என்பது நினைவில்லை. முகம் கழுவிவிட்டு ஒரு தேனீர் குடித்தால் தேவலாமென்று இருந்தது அவளுக்கு. எழுந்து கைப்பையை எடுத்துக்கொண்டு டாய்லெட் சென்றவள் கைவசமிருந்த சோப்பு, சீப்பின் உபயத்தில் திருத்தமாய் தேனீர் கோப்பையொன்றைக் கையிலேந்தியபடி தன் இருக்கைக்கு வந்தாள் தேவிகா.

முகம் கழுவித்துடைத்து ஒழுங்கு செய்த பிறகு சற்று பரவாயில்லையென்று இருந்தது. அலுவலகத்தைப் பற்றிய நினைவுகளில் மூழ்க முயற்சிப்பது இன்னும் கொஞ்சம் செளகர்யம் கூட்ட‌உதவுமென்று தோன்றியது.

பயனீட்டாளர் பெயர், கடவுச்சொல். பின்னர் ஒளிர்ந்த திரையில் ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும் கோப்புக்கள், தானாய் கீழிருந்து மேலெழுந்த ஒரு....

'ஹாய், தேவி... சனி ஞாயிறு எப்படி போச்சு'. திரையின் மீதிருந்த தேவிகாவின் கவனத்தில் பாதியும் போச்சு.

'ஹாய்..ம்ம்ம்.. தேவலை. உங்களுக்கு?'.

'ம்ம்... ஏதோ போச்சு. கோயிலுக்குப் போனேன் நண்பர்களோட'.

தேவிகா எந்த‌க் கோயிலென்று கேட்க‌வில்லை என்ப‌தைக் குறிப்பெடுத்துக்கொண்டவன் தொடர்ந்தான்.

'தேவி, நாளைக்கு ஆடிட்டுக்கு அந்த‌ரிவ்யூ பெண்டிங்ல‌இருக்கு. முடிச்சிட்டு சொல்றீங்க‌ளா?' என்றான்.

'ஆங், ச‌ரி. செந்தில், எனக்கு லேசா தலைவலி. மன்னிச்சுக்கோங்க. நான் முடிச்சிட்டு சொல்லிடறேன் பா' என்றுவிட்டு லேசாக சினேகம் காட்டிச் சிரித்தாள் தேவிகா. சொல்லிக்கொண்டே அவன் கண்களை ஊடுருவியதில் அவன் பார்வை எங்கு சென்றது என்பதைக் கவனிக்குமுன் அவள் பார்வையை விட்டகன்றுவிட்டதாய் தோன்றியது.

அவள் இருக்கையை விட்டகன்றவாறே 'ஓ அப்படியா, பரவாயில்ல தேவி.' என்றான் செந்தில். அவன் அகண்டபின், ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டாள். கழுத்தை ஒட்டிக்கிடந்த துப்பட்டா கழுத்தையும், மார்பையும் மூடியவாறு சரியாக தன் இடத்தில் கச்சிதமாக இருக்கிறது என்பது சற்று நிம்மதியளித்தது.

அவ்வப்போது செந்தில் ச‌ரியில்லையோ என்று தோன்றும் தேவிகாவிற்கு. தொட‌க்கம் முத‌லாய், அவ‌ன் ஏதேனும் பேச‌வ‌ருவ‌தும் இவ‌ள் ச‌ரியாக‌ப் ப‌தில‌ளிக்காம‌ல் பேச்சை உடைப்ப‌தும், உடைத்ததை வெளிக்காட்டாதவளாய் லேசாக சிரித்து நடிப்பதுமாய் இந்த சம்பாஷனைகளுக்கு ஒரே காரணம், அவன் பார்ப்பதற்கு அந்தப் பேருந்தில் பார்த்த பிணங்கள் சாயல். அவன் எப்போது பேசினாலும் வழிவது போலவே தோன்றுகிறது. ஐந்தேகால் அடி உயரம், கலைந்த தலைமுடி, கருப்பு உருவம், முகம் முழுதும் உப்பி வெடித்திருக்கும் பருக்கள், கருப்பு நிறத்தில் பாண்டும் மெரூனில் சட்டையும் அணியும் ரசனை, இடுப்பில் பிதுங்கும் ஊளைச்சதை, அதில் வழுக்கும் பாண்ட் பெல்ட் இதெல்லாம் தரும் அலட்சியமா அல்லது அறிவு ஜீவித்தனத்திற்கோ அல்லது முதிர்ந்த நாகரீகத்தின்கீழ் இவையெல்லாம் வராதென்கிற தன் அவதானிப்பில் முளைத்த அலட்சியமா? விரல் அசைவிற்கு எல்லோரும் காத்திருப்பதாலேயே அனிச்சையாய் தோன்றிடும் அலட்சியமா? தெரியவில்லை. தன் கவனத்தை ஒரே பார்வையில் கவர்ந்திடாத அவனின் இயலாமையில் முளைத்த ஆயாசத்தின் வெளிப்பாடா, இந்த அலட்சியம். பிடிபடவில்லை.  

ஆனால், நாளையும் இதே இருக்கையில், இவன் இருக்கும் இதே குழுவில் எல்லோருடனும் இணைந்தே வேலை செய்ய நேரும். முறுக்கிக்கொண்டால் பாதகம்தான். அவன் முறைக்கலாம். வெடுக்கென்று பதில் சொல்லலாம்.வெடுக்கென்று யாரேனும் பதிலளித்தால், தொண்டை அடைக்கிறது தனக்கு. கோபம் வருகிறது, ஆனால் அதை மறைக்கவேண்டிய நிர்ப்பந்தமும் சேர்ந்தே வருகிறது. வார்த்தைகள் தந்தி அடிக்கிறது. மொத்தத்தில் இயல்பு சுத்தமாக இல்லை. முதுகிற்குப் பின்னால் தன்னைப் பற்றி அவதூறு சொல்லலாம், சேர்ந்து செய்யவேண்டிய வேலையில் ஒத்துழைக்காமல் பிரச்சினை செய்யலாம், வேண்டுமென்றே முன்னுக்குப்பின் முரணாய்ச் செய்து கவிழ்க்கலாம். எதற்கு வீண் வம்பு. இவனையெல்லாம் பகைத்துக்கொள்ளாமல் கடந்து போய்விடுவதே சாணக்கியத்தனம் என்பதாய் விட்டுவிடலாம் என்று தோன்றியது.

இத்தனை பிரச்சினை செய்யக்கூடிய இவனுக்குக் கூட ஒரு காதலி இருக்கலாம். உண்மையில் இருக்கிறாள்தான். ஆனால், தன்னிடம் வழிகிறான். இவன் காதலிக்கு இது தெரியுமா? தெரிந்தால் காதலிப்பாளா? தெரியவில்லை. தனக்கென்று வரும் ஆண் கூட இப்படித்தான் வேறெவளிடமாவது வழிவானா? தெரியவில்லை. ஆண்கள் எல்லோருமே இப்படித்தானா? என்ன குதர்க்கமான சிந்தனை இது என்று மீண்டுமொருமுறை நினைத்தமாத்திரத்திலேயே தோன்றியது . உண்மையாகவே இப்போது லேசாக தலை வலிப்பது போலிருந்தது தேவிகாவிற்கு. 'தீன்னு சொன்னா நாக்கு சுட்டிடுமா என்ன?' அம்மாவின் வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வருவது தேவையில்லாமல் சிந்தையைப் பாரமாக்கியது.

இது சரிப்படாது. அரை நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். முடிவு செய்துகொண்டாள். மேலதிகாரிகளுக்கு அரை நாள் விடுப்பு சொல்லி மின்னஞ்சல் அனுப்பினாள். முடிக்க வேண்டிய ரிவ்யூக்களை முடித்துவிட்டு ஸ்டார்டீம் மென்பொருளில் கோப்புக்களைக் கோர்த்தாள். நல்லவேளை, அன்று ஏதும் டெட்லைனோ, மீட்டிங்கோ இல்லை. மதியம் 12 மணிக்கெல்லாம் கைப்பையையும் குடையையும் எடுத்துக்கொண்டு அலுவலகம் விட்டு வெளிவந்து கிடைத்த பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தாள்.

அவளுக்கு முன்பாகப் பொறியியல் கல்லூரியில் படிக்கும் தம்பி அர்ஜுன் வீடு வந்து சேர்ந்திருந்ததைக் கவனித்தபடியே அமைதியாய் வீட்டிற்குள் நுழைந்தாள் தேவிகா. அமைதியாய் எதிர்ப்படும் அக்காளை எதிர்கொண்டான் அர்ஜுன்.

'ஹேய் அக்கா, என்னாச்சு, அதுக்குள்ள வந்துட்ட?'. ஆர்வத்துடன் கேட்டான் அர்ஜுன்.

'ம்ம்.. எக்ஸாம் முடிஞ்சாச்சா? நல்லா பண்ணிருக்கியா?'. பலவீனமாய் பதிலளித்தாள் தேவிகா.

'ம்ம்..உன் தம்பியாச்சே. உன் பெயரைக் கெடுப்பேனா? நல்லா பண்ணிருக்கேங்க்கா'.

'எக்ஸாம் முடிஞ்சாலும் நீ சாயந்திரம்தானே வருவ. அதுக்குள்ள வந்துட்ட?'.

'சாப்பிட்டுட்டுப் போகலாம்னு வந்தேங்க்கா. நீ ஏங்க்கா அதுக்குள்ள வந்துட்ட?’ அக்காளின் வார்த்தைகளில் தோன்றும் பலஹீனத்தை அவதானித்தவனாய்க் கேட்டான் அர்ஜுன்.

'ஆங்.. சும்மாதான்' என்றவாறே அமைதியாக ஹாலைத்தாண்டி உள்ளறைக்குள் நுழைந்தவளை சுருங்கிய புருவங்களுடன் பின் தொடர்ந்தான் அர்ஜுன்.

'என்னாச்சுக்கா.. ஏன் டல்லா இருக்க?' பரிவுடன் கேட்டான் அர்ஜுன்.

'ஒண்ணுமில்லைடா'.

சலிப்புடன் சொன்னபடியே கைப்பையை அருகேயிருந்த மேஜையில் வைத்துவிட்டுப் படுக்கையில் அமர்ந்தாள் தேவிகா.

'என்னமோ இருக்குன்னு உன் மூஞ்சில எழுதி ஒட்டியிருக்கு. சொல்லமாட்டேங்குற. என்னன்னு சொன்னாதானே தெரியும்' என்றவன் கண்களை ஆழ்ந்து ஊடுருவினாள் தேவிகா.

இவனிடன் சொல்லிவிடலாமா? இத்தனை நாளும் இது போல நடப்பதைச் சொன்னதில்லை. சொல்லக்கூடாதென்று யாரும் சொல்லவில்லை. சொல்லவேண்டும் என்றும் யாரும் சொல்லியிருக்கவில்லை. தோழிகள் கூட இதையெல்லாமா சொல்வது என்கிற ரீதியிலேயே பேசியிருக்கிறார்கள். இங்கு தொடங்குகிறது மிகப்பெரிய முரண். தங்கை, அக்காள், அம்மா என்பதாகப் பெண்களுடனே வளர்ந்தாலும் ஆண்களுக்கு பெண் என்பது புரிவதில்லை. அப்பா, அண்ணா, தம்பி, மாமா, சித்தப்பா என்பதாக ஆண்களுடனே வளர்ந்தாலும் பெண்கள் ஆண்களால் ஏமாற்றப்படுவதாகவோ, பெண் சுதந்திரம் பறிப்பவர்களாகவோதான் தெரிகிறார்கள்.  

இந்தச் சமூகம் ஏனிப்படி குதர்க்கமாக வளர வேண்டும். கைக்கெட்டும் தூரத்தில், அதுவும் வருடக்கணக்கில் கூடி வாழும் சமூக அமைப்பில் இத்தனை பெரிய முரண் அமைவது, இப்படியான விஷயங்களைப் பகிராமல் இருப்பதால்தானோ என்று நினைக்கத்தோன்றியது. இப்படியான முரண்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பகிரப்படாமலே இருப்பதுதான் சமூகம் குருடாய்ப் போவதற்கு முக்கிய காரணமென்று தோன்றியது.  

பெண்ணின் ஸ்பரிசம் பெற காதல் வேண்டும். அன்பு வேண்டும். புரிதல் வேண்டும். இணக்கம் வேண்டும். அவள் அங்கீகரிக்க வேண்டும். அவள் பூரிக்க வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும். இது எதுவுமே புரியாமல், நடக்காமல், காத்திருக்காமல் அவசரமாக‌மேலோட்டமாக காதலென்ற பெயரில் ஆண் பெண்ணை அணுகுகிறான். தொடக்கத்தில் நிகழும் சில இனிமையான தருணங்களில் லயித்து தான் நினைத்த காதல் இதுதானென்று பெண்மை ஏமாந்து இணைகிறது. திருமணத்திற்குப் பின்னோ அல்லது காதலிக்கத் துவங்கிய பின்னோ, நிதர்சனங்களால் காதல் புளிக்கிறது. தவறு செய்துவிட்டதாய் தோன்றவைக்கிறது. பிரிய, காரணம் தேடுகிறது. விரும்பிய வாழ்க்கை முக்கியமென நினைக்க வைக்கிறது. தன்னிச்சையாய் விரும்பிய வாழ்க்கையைத் தேட வைக்கிறது. கிடைத்துவிட்டால் திருமண உறவை முன்வாசல் வழியாகவோ, பின்வாசல் வழியாகவோ தாண்டிப் போக வைக்கிறது.

தன்னைப் போலத்தான் ஆணும் என்பதாகும் பெண்ணின் அவதானிப்புகள் தவறு என்பதற்கு பேருந்தில் நெரிசலில் பெண்மைக்கு நேரும் இடர்களே அத்தாட்சி. பெண்ணைப்போல் ஆணுக்கும் ஒரு பெண்ணைத்தொட காதல், அன்பு, அர்ப்பணிப்பு தேவையெனில் ஏன் இன்று காலையில் அந்தக் குமட்டும் நிகழ்வு. பெண்ணைப்போல் ஆண் இல்லை. ஆணைப்போல் பெண் இல்லை. இரண்டுமே புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று. புரிதல், பகிர்தலில் மட்டுமே சாத்தியம்.

தேவிகா என்கிற பூந்தோட்டம் மடை திறந்தது.

நடந்த எல்லாவற்றையும் அர்ஜுனிடம் சொன்னாள் தேவிகா. அர்ஜுன் முதலில் அதிர்ச்சி அடைந்தான். எவன் அந்த தே... என்பதாய் ஏசினான். விரல் முறுக்கினான். பற்கள் கடித்தான். வெகுண்டான். தேவிகா அர்ஜுனின் கோபம் தேவையற்றது என்பதை விளக்கினாள். அந்தப் பிணத்தை எதிர்க்க இயலாத தன் இயலாமையில் ஒளிந்துள்ள ஏனைய நிதர்சனங்களை விளக்கினாள். அந்தப் பிணத்தை எதிர்த்துக் செருப்பைக் கழட்டாததில் உள்ள நடைமுறைச் சிக்கலை விளக்கினாள். சுமூகமான வாழ்விற்கு சில பிணங்களைக் கடந்துசெல்வது கோழைத்தனமாகாதென்றாள்.

காதலையும் அர்ப்பணிப்பையும் நேசிக்கும் தன் நிலைப்பாட்டை விளக்கினாள். ஆணின் தேடல் பெண்ணின் தேடலுக்கு நேரெதிர் என்பதை அந்தப் பிணம் விளக்கிவிட்டதென்றாள். ஆண்களின் தன்மை அதுதானென்பதைப் புரிந்துகொண்டதாய் விளக்கினாள். பெண்ணின் தேடல் தெரியாமல் அணுகுவதில் நிகழும் குளறுபடிகளை விளக்கினாள். திருமணத்திற்குப்பின் இவனைக் காதலித்திருக்கவேண்டாமென பெண்ணும், இவளைக் காதலித்திருக்கவேண்டாமென ஆணும் நினைத்துவிடக்கூடாதென்றாள். அறிவியலில் உளவியலையும், உளவியலில் அறிவியலையும் சேர்த்து விளக்கினாள்.

அர்ஜுன் முதல் முறையாகப் பெண்மையை புரிந்துகொள்ளத்துவங்கினான். தன்னை மேலும் தெரிந்து கொள்ளத் துவங்கினான். ஆண் பெண் என்பது உயிரியல் மட்டுமல்ல, உளவியலும் கூட என்று புரிந்துகொண்டான். அக்காளுக்கும் தம்பிக்குமான அந்த அன்பான உறவு இன்னமும் இறுகிப்போனது. அங்கே ஒரு இணக்கமான அமைதி நிலவியது.

'சரிடா, நீ எங்கயோ போகணும்னு சொன்னியே, போயிட்டு நேரத்தோட வாடா' அமைதியை அக்கறையால் களைத்தாள் தேவிகா.

'இல்லக்கா. நான் போகலை. பக்கத்து காலேஜ்ல ஒரு பொண்ணு. அவள பாக்கத்தான் போகலாம்னு இருந்தேன். உண்மைய சொல்லணும்னா அவகிட்ட என் காதலைச் சொல்லலாம்னுதான் போகலாம்னு இருந்தேன். ஒரு மாசமா பாத்துக்குறோம். பேசிக்கிறோம். அவ யாரு, என்னன்னு எதுவுமே தெரியாது. நீ சொன்னதையெல்லாம் வச்சு பாக்கும்போது இன்னும் நிதானம் தேவைன்னு தோணுது. நான் போற வழி தப்புன்னு தோணுது. முதல்ல புரிஞ்சிக்கணும்னு தோணுது. இத வேற மாதிரி அணுகணும்னு தோணுது. அது எவ்ளோ முக்கியம்னு புரியுதுக்கா. வேணாம். இப்போதைக்கு அவளுக்கு நல்ல நண்பனா மட்டும் இருக்குறேன். படிப்பு முடியட்டும். அப்புறம் பார்க்கலாம்' என்றுவிட்டு அமைதியாய் வெளியேறும் அர்ஜுனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தேவிகா. குருட்டுச்சமூகம் மெல்லமெல்ல தன் பார்வையைப் பெற்றுவிடும் என்ற நம்பிக்கை இன்னும் ஆழமாக வேர்விடத்துவங்கியது தேவிகாவிற்கு.

முற்றும்.  

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5905)

Viewing all articles
Browse latest Browse all 1140

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>