Quantcast
Channel: ராம்பிரசாத்
Viewing all articles
Browse latest Browse all 1140

அகப்படாமல் ஒரு கொலை - பகுதி-2

$
0
0

அகப்படாமல் ஒரு கொலை -பகுதி-2 - சிறுகதை

முத்து என்கிற முத்துகிருஷ்ணன், திருவல்லிக்கேணியில் தனது மேன்ஷன் அறையில் இப்படியாக ஆர்ப்பரித்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், சப் இன்ஸ்பெக்டர் துரை என்கிற துரைவேலன், தனது விட்டில் படுக்கையறையில் தீவிர சிந்தனையில் இருந்தார்.

ஒரு கொலை கேஸ். எப்படி முடிப்பதென்றே தெரியவில்லை. துரைவேலனின் 15 வருட சர்வீஸை வெகுவாக பதம் பார்க்குமோ என்றிருந்தது. பிள்ளைகள் ரகு, ரம்யாவின் எக்ஸ்கர்ஷன் ஃபீஸ், மனைவி பரிமளா ஆசையாய் கேட்டிருந்த தங்க வளையல், இன்ஸ்டால்மென்டில் வாங்கிய வீட்டின் மாதத்தவணை என நேர்மையான துரைவேலன் தனக்கான ப்ரோமோஷனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நிலையில் இந்த கேஸ் வகையாக சிக்கிக்கொண்டிருந்தது.

கேஸ் பற்றி சொல்ல வேண்டுமானால், அது ஒரு குழப்பம். தி நகரின் பனகல் பார்க்கில், இரண்டு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை அதிகக் கூட்டமில்லாத காலை 11 மணிக்கு சூரியன் தலைக்கு மேல் நார்பத்தியைந்து டிகிரியில் சாய்ந்தவாறு வெய்யில் மண்டையை பிளக்கையில் பனகல் பார்க் பெஞ்சில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு இறந்துவிட்டிருக்கிறார். ரத்த சேதம் மிக அதிக அளவில் இருந்தது.

கொலை செய்யப்பட்டவர் ஒரு சாமான்யன். வயது ஐம்பது. இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்து, மூன்றாவதுக்கு காத்திருந்தவர். சொத்து என்று சல்லிக்காசு தேராது. அதண்டு எதையாவது கேட்டால் அழுதுவிடுவாராம். அத்தனைக்கு சாது. ஒரே ஒரு பிள்ளை. அவன் தாம்பரம் மெப்ஸில் ஒரு தொழிற்சாலையில் ஃபோர்மேன் ஆக வேலை செய்கிறான். ஆக கொலை செய்யப்பட பெரிதாக எந்த மோட்டிவும் எவருக்கும் தந்திராதவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலையாளியை எவரும் பார்க்கவில்லை. வெகு திறமையான கொலைகாரனா அல்லது தற்செயலான கொலையா என்று சரியாக அறுதியிடமுடியாமல் இருந்தன தடயங்கள். தடயங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தடயங்கள் என்று ஒன்றுமே இல்லை. 10 அடி தள்ளி இரண்டு பிச்சைக்காரர்கள். இருவருக்கும் கண் பார்வை இல்லை. ஒருவன் கொலை நடந்த சமயம் வெறுமனே உறங்கிக் கொண்டிருந்திருக்கிறான். இன்னொருவன் மட்டும் வெய்யிலில் தூக்கம் வராமல் விழித்திருந்திருக்கிறான். ஆனால் அவன் எதையும் கேட்கவில்லையாம்.

மோப்ப நாய் அங்குமிங்கும் அலைந்து, உரக்க‌ குரைத்து வாலை குழைத்து, பின் சாதுவாய் யாரேனும் பிஸ்கட் போடுவார்கள் என்று உட்கார்ந்துவிட்டது. கொலை நடந்த இடத்தில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ரேகைகள், பயணச்சீட்டு, சிகரெட், துண்டுக் காகிதம் என ஒன்றுமே கிடைக்கவில்லை. கொலை காலை 11 மணிக்கு நடந்திருக்கிறது. பிரேதப்பரிசோதனையில் கவனிப்பாரற்று கிடந்ததினால் ரத்தம் அதிகம் வீணாகியே மரணம் சம்பவித்திருக்கிறது என்று இருந்தது. சம்பவத்தை முதலில் பார்த்த ஒரு பழ வியாபாரியிடமிருந்து தான் ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் வாங்கமுடிந்தது. அவரும் தாமதமாகத்தான் கவனித்து போலீஸில் சொல்லியிருக்கிறார். அந்த தாமதத்தில் தான் ரத்த சேதமாகியிருக்கிறது.

இவ்வளவுதான் கேஸ். இதை எங்கே தொடங்குவது? எதில் தொடங்குவது? எப்படித் தொடர்வது? என்றெல்லாம் பல கேள்விகள் மனதைத் துளைத்துக்கொண்டிருந்தது துரைவேலனுக்கு. இளம் கான்ஸ்டபிளாக காவல்துறையில் சேர்ந்து, பிறகு ஏ.எஸ்.ஐ ஆகி, இப்போது எஸ்.ஐ ஆகிவிட்டாயிற்று. அடுத்த ப்ரமோஷன் இன்ஸ்பெக்டர். அதற்குத்தான் எத்தனை போட்டி. அதிகார வர்க்கத்துடன் தொடர்புடையவர்கள் சிபாரிசுடனும், கடந்த காலத்தில் சஸ்பென்ட் ஆனவர்கள் பெட்டி நிறைய பணத்துடனும் போட்டி போட தயாராகிக்கொண்டிருக்க, இது எதுவுமில்லாமல் ப்ரமோஷன் பெற வேண்டுமானால் இந்தக் கேஸை விவேகமாக, திறமையாக முடிக்க வேண்டும். முடித்தால், நல்ல பெயரை தக்க வைக்கலாம். கிடைக்கவேண்டிய ப்ரமோஷனுக்கும், ஊதிய உயர்வுக்கும் இது சரியாக உதவும். நேர்மையான அணுகுமுறை. நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கூட அலைந்து தேடியோ, சிரமப்பட்டோ, போராடியோ தான் அடைய வேண்டியிருக்கிறது.

'என்னங்க, கொஞ்சம் சாப்பிட வரீங்களா?' மனைவி பரிமளா இந்த முறை எச்சரித்தது போலிருந்தது.

'எனக்கு சாப்பாடு வேணாம், பரி'

'எத்தனை தடவ சொல்லியிருக்கேன், என்னை பரின்னு கூப்பிடாதீங்கன்னு.. பரின்னா குதிரைன்னா அர்த்தம்... நான் என்ன குதிரை மாதிரியா இருக்கேன்?'

'ஆமா, அரேபிய‌ குதிரை மாதிரிதானே இருக்க‌'

'அட‌டா.. போறுமே.. இப்படியே பேசித்தான் ஏற்க‌ன‌வே ரெண்டு ஆச்சு.. இதுல‌ இன்னொன்னா? இருக்குறதுக்கே இங்க சம்பாத்யம் போதல‌' ச‌லித்தாள் ப‌ரிம‌ளா.

அத‌ற்கு மேல் துரைவேல‌ன் ஏதும் பேச‌வில்லை. மீண்டும் அமைதியானார். கேஸை இன்ன‌மும் எப்ப‌டித் தொட‌ர்வ‌து என்று தெரிய‌வில்லை. ம‌ணி இர‌வு 9. விடிந்தால் ப்ராக்ர‌ஸ் காண்பிக்க‌ வேண்டும். முன்தின‌மே அடுத்த‌ நாளுக்கு எப்ப‌டி விசார‌ணையைத் தொட‌ர்வ‌து என்ப‌து ப‌ற்றி ரிப்போர்ட் த‌ருவ‌தாக‌ உறுதிய‌ளித்தாகிவிட்ட‌து. அடுத்த‌ நாளுக்கு விசார‌ணைக்கான‌ ப்ளான் இல்லாவிட்டால் உய‌ர‌திகாரிக‌ள் ம‌த்தியில் சோடையாகிவிடுமே என்று க‌வ‌லையாக‌ இருந்த‌து துரைவேல‌னுக்கு.

'அப்பா, நீ என்ன‌ப்பா ப‌டிச்சிருக்க‌?' கையில் மாத்ஸ் புத்தகத்துடன் குடுகுடுவென‌ ஓடிவ‌ந்து ப‌டுக்கையில் துரைவேலன் அருகில் உட்கார்ந்த‌ப‌டி கேட்டான் பிள்ளை ர‌கு.

'பி.எஸ்ஸி மாத்ஸுப்பா.. ஏன் கேக்குற‌ ர‌கு?'

'பாஸ் ப‌ண்ணிட்டியாப்பா?'

'ம்ம்.. ஃப‌ர்ஸ்ட் க்ளாஸுப்பா..'

'காப்பி அடிச்சி பாஸ் பண்ணியாப்பா?'

கிச்சனிலிருந்து களுக்கென்று சத்தம் கேட்டது.

'டேய், என்ன‌டா கேள்வி இது? யாரு கேக்க‌ சொன்னா? உங்க அம்மாவா?'

'என்ன‌து? நான் ஏன் கேக்க‌ சொல்றேன்? என‌க்கு தான் தெரியுமே' என்று பூடகமாய் நிறுத்திக்கொண்டாள் ப‌ரிம‌ளா கிச்ச‌னிலிருந்தே.

'எங்க மிஸ் கேட்டாங்கப்பா?' என்றான் ரகு.

'ஓ அவுங்களுக்கும் தெரிஞ்சி போச்சா?' மீண்டும் கிச்சனிலிருந்து களுக்.

புதிரான கேஸுக்கு ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்காததில் வெறுப்பாக இருந்தது துரைவேலனுக்கு. இப்படி, ஒரு கேஸ் கூட இதற்கு முன்பு சிக்கியதில்லை. பிற கேஸ்களில் எப்போதும் ஏதாவது ஒரு மோட்டிவ் இருக்கும். அதை வைத்தே கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்று பட்டியலிட்டு சாட்சியங்கள், தடயங்கள், விசாரணை என்று ஒவ்வொருவராக குறைத்துக்கொண்டே வந்து கடைசியில் குற்றவாளியை நெருங்கலாம். ஆனால் இந்தக் கேஸில் மோட்டிவே தெரியவில்லை. வேறு எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.

'டேய், அதிகப்பிரசங்கி.. போடா போய் படி.. ஹோம்வொர்க் பண்ணு' அதட்டினார் துரைவேலன்.

'என்னங்க, சின்ன பையன் ரகு. அவனை ஏன் அதட்டுறீங்க. நானும் பாக்கறேன். ரெண்டு நாளா நீங்க ஒண்ணும் சரியில்லை. எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஆபிஸ் டென்ஷனையெல்லாம் வீட்டுல காமிக்காதீங்கன்னு. வீட்டுக்கு வந்தா புருஷனா, பிள்ளைகளுக்கு அப்பாவா நடந்துக்கோங்க. ஆபிஸ் வேலையெல்லாம் தானா நல்லா நடக்கும். அத விட்டுட்டு சின்னப் புள்ள, அவன் கிட்ட எரிஞ்சி விழுந்துக்கிட்டு' என்றாள் பரிமளா.

'ஓஹோ, இப்போதானே புரியிது.. இவன் மாத்ஸ்ல ஏதாச்சும் கேட்டிருப்பான்.. அதான் என்கிட்ட தள்ளிவிடறியாக்கும்'

'விட்டா என்ன? அப்பா தானே நீங்க.. வீட்டுக்கு வந்தாச்சு. இனி என்ன ஆபிஸ்? அவனுக்கு ஏதோ டவுட்டாம். கொஞ்சம் சொல்லிக்குடுங்க. இல்லைன்னா சொல்லுங்க. நானே சொல்லித்தரேன். அதுவரைக்கும் இந்தக் கீரையை கொஞ்சம் ஆய்ஞ்சு குடுங்க'

இதுபோன்ற தருணங்களில் வீட்டுத்தலைவர்கள் பிள்ளைகளின் ஹோம்வொர்கை தேர்ந்தெடுப்பது உத்தமம். மீறினால், கீரை நன்றாக மசியாததற்கும், அதனால் சுவையில்லாமல் போனதிற்கும் வீட்டுத்தலைவர்கள் ஆய்ந்தது தான் காரணம் என்கிற குற்றச்சாட்டுகளை அடுத்த 1 மணி நேரத்தில் கேட்க வேண்டி வரலாம், அல்லது நள பாகத்தை கூட துவங்க வேண்டி வரலாம் என்பது துரைவேலனுக்கு தெரிந்தே இருந்தது.

'ரகு, என்னடா டவுட் உனக்கு? அப்பாகிட்ட சொல்லு'

'அப்பா, பிதகோரஸ் தியரம் சொல்லித்தாப்பா'

'ம்ம்ம், குடு பாக்க‌லாம்' என்ற துரைவேலனிடம் ம‌டித்து வைத்திருந்த‌ புத்த‌க‌த்தை விரித்து நீட்டினான் ர‌கு.

இந்தியக் குடும்பத் தலைவர்களுக்கு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தருவது ஒரு வகையில் தண்டனை. மார்க் வாங்குவதற்கென படித்துவிட்டு பரீட்சையில் வாந்தி எடுத்தது, பிட் அடித்து பாஸ் பண்ணியது, அரீயர்ஸ் வைத்து பாசானது, சைட் அடித்து கோட்டை விட்டது இதெல்லாம் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கையில் தான் தெரியவரும்.

In a Right angled triangle, sum of the squares of the sides are equal to the squares of the hypotenuse.


'அதாவது ரகு, ஒரு ரைட் ட்ரையாங்கிள்ல, ....' என்று இழுத்த துரைவேலன் புருவங்கள் சற்று சுருங்க, சுருங்கிய புருவங்கள் விரிகையில் அவருக்குள் ஒரு 60 வாட்ஸ் பல்பு எரிந்தது.

'எஸ்.. எஸ்.. கண்டுபிடிச்சிட்டேன்... எஸ்.. '

துரைவேலன் படுக்கையிலேயே பரவசமுடன் எம்பிக்குதிக்க‌, ரகு, துரைவேலனின் பரவசத்தைக் கண்டு பயந்து ஓவென்று அழ ஆரம்பிக்க, ரகு அழுவதைக் கண்டு என்னமோ ஏதோவென பரிமளா அடுப்பங்கரையினின்றும் ஓடிவர, அன்றைய இரவு, துரைவேலனுக்கு சிவராத்திரியாகிப்போனது. துரைவேலன் இமைகள் அவரை இரவு முழுவதும் நித்திரையில் ஆழ்த்த முயன்று தோற்றன‌.

மறு நாள் நன்பகல், தி நகர் ஆர் 1 போலீஸ் ஸ்டேஷனில்...

'என்ன துரை, அந்த பனகல் பார்க் கொலை கேஸ்... ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பண்ணிட்டீங்களா?'

'எஸ் சார்...கிட்டத்தட்ட கொலைகாரனையும் நெருங்கிட்டேன் சார்'

'அப்படியா... யாரு அது'

'சார், திருவல்லிக்கேணில வல்லபாய் பட்டேல் ரோட்ல வாசவி மேன்ஷன்ல ரூம் 13ல முத்துக்கிருஷ்ணன்னு ஒருத்தர் தான் சார்... நான் காலைலயே போய் விசாரணைக்குன்னு அரெஸ்ட் பண்ணி அழைச்சிட்டு வந்திட்டேன் சார்'

'எப்படி.. எப்படி அவர்தான்னு கண்டுபுடிச்சீங்க?'

'சார், கொலை நடந்த இடத்துக்கு பக்கத்துல இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்திருக்காங்க. இரண்டு பேர்ல ஒருத்தன் தூங்கல, காரணம் உச்சிவெய்யில். ஆனா, பக்கத்துல உட்கார்ந்திருந்த இன்னொருத்தன் தூங்கியிருக்கான். அப்படின்னா, அங்க வெயில் இருக்கலை. சோ, அங்க யாரோ நின்னிருக்காங்க. அதனால, அவன் மேல நிழல் விழுந்திருக்கலாம். அது அந்தக் கொலைகாரனோடதா இருந்திருக்கலாமுங்குற கோணத்துல கேஸை ப்ரோசீட் பண்ணினேன் சார்'.

'அந்த இடத்தை பார்த்தேன் சார். காலை 10-11 மணிக்கு ஒரு வேளை கொலைகாரன், நோட்டம் விட்டிருந்தா அப்போ அவனோட நிழல் அந்த பிச்சைக்காரன் மேல விழுந்திருக்கும். அதான் வெய்யில் இல்லாம தூங்கியிருக்கான். 45 டிகிரில சூரிய ஒளி விழுந்து, ஒருத்தனோட நிழல் 189 சென்டிமீட்டர் வரை விழுந்தா, பிதகோரஸ் தியரம் படி, அவனோட உயரம் ஆறடி ரெண்டு அங்குலம் இருக்கும் ஸார். பிரேதப்பரிசோதனையில கொலையாளி பலவீனமா கத்தியை பாய்ச்சியிருக்கிறதா இருக்கு சார். அதாவது, கத்தி, இதயம் வரைக்கும் பாயவில்லை. இதயம் சேதமடையாதபோதும், அதிகப்படியான இரத்த சேதத்தால் பெரியவர் உயிர் பிரிந்திருக்கிறது. அப்படியானால், கொலையாளி அத்தனை ஆகிருதியானவனா இல்லை. அதாவது கொலையாளி 70 கிலோவுக்கு குறைவா இருக்கலாம். தமிழ் நாட்டுல சாதாரணமா மக்கள் ஐந்தரை அடி இருப்பாங்க சார். ஆறு அடி ரெண்டு அங்குலம் இருக்குறதெல்லாம் ரொம்பவே அபூர்வம். அதுவும் 70 கிலோவுக்கு குறைவா. அதை வச்சி சென்னைல முக்கியமான ஹாஸ்பிட்டல்ஸ்ல, மெடிக்கல் இன்ஸுரன்ஸ் கம்பெனிகள்ல‌ எல்லாம் தேடினேன் சார். ரொம்ப சுலபமா மாட்டிக்கிட்டான் சார்.'

'ஓ.. எக்ஸலண்ட் துரை.. லாஜிக்.. ஆனா, கொலைக்கு என்ன காரணம் சொல்றான் அவன்? ஏன் கொன்னானாம்?'

'சார், இவன் கட்ட பிரம்மச்சாரி. மிதமிஞ்சி தனிமைல இருந்திருக்கான். கிறுக்குத்தனமா சீரியல் கொலைகாரர்கள், சைக்கோ கொலைகாரர்கள் பத்தியெல்லாம் படிச்சு தெரிஞ்சிகிட்டு ஒரு ஹீரோயிஸத்துல இப்படி பண்ணியிருக்கான், சார். அவ்வளவுதான்'

க‌மிஷ‌னர் உதட்டைப் பிதுக்கி நீண்ட‌தொரு பெருமூச்சுவிட்டு துரைவேல‌ன் ப‌க்க‌ம் திரும்பினார்.

'ப்ரில்லியண்ட்.. துரை.. கங்கிராட்ஸ்.. அக்யூட் லாஜிக்கல் திங்க்கிங்'

'தாங்க்ஸ் சார்... உண்மையை சொல்லனும்னா என் பையன்தான் சார்.. க்ளூ குடுத்தான்'

'அப்படியா, ஹோம்வொர்க்க்கு உங்ககிட்ட வந்தாராக்கும்?'

'அட.. எப்படி சார் கரெக்டா சொல்றீங்க?'

'இதென்ன பிரமாதம்.. உங்க ஒய்ஃப் கூட திட்டியிருப்பாங்களே?'

துரைவேலன் அங்கீகரிப்பாய் புன்னகைத்தார்.

'எல்லார் வீட்டிலேயும் நடக்கிறதுதான். அவங்க சொல்றதும் உண்மைதான் துரை. எப்போதுமே வேலையையே பார்த்துக்கொண்டிருந்தால், நமக்கு புதிய சிந்தனைகள் தோன்றாதுதான் துரை. எனிவே, கம்ப்போஸ் தி ரிப்போர்ட் அன்ட் சென்ட் அக்ராஸ். உங்க ப்ரமோஷன் நிச்சயம்' என்றுவிட்டு கண்ணடித்தார் கமிஷனர்.

துரைவேலனுக்கு பரிமளா, ரகு, ரம்யா முகங்கள் நினைவில் நிழலாடியது.

முற்றும்.

- ‍ ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Viewing all articles
Browse latest Browse all 1140

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>